சமஷ்டி என்பது
அரசியல் என்பது அதிகாரத்தை உருவாக்கி அதனைப் பங்கிடும் ஒரு சமூக முறைமையாகும். ஒரு சமூகத்துக்காக அதிகாரத்துடன் கூடிய தீர்மானங்களை எடுப்பதற்கும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் அவசியமான வழிமுறை, அரசியல் முறை எனப்படும்;. அரசியல் முறையின் பல பிரிவுகளில் ஜனநாயகம் முக்கியமான ஒன்று. ஜனநாயகத்தை அடியொற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட்சி முறைகளில் ஒற்றை ஆட்சிமுறை, சமஷ்டி ஆட்சிமுறை என்பன இரு பிரதான கூறுகளாகும்.
அதிகாரம் பிளவுபடா வகையில் அதனை நாடு முழுவதும் பிரயோகிப்பது, ஒற்றை ஆட்சிமுறை. இதற்கு பிரித்தானிய, இலங்கை ஆட்சி முறைகள் எமக்கு நன்கு பரிச்சயமான உதாரணங்கள். அதிகாரம் ஒரு நாட்டின் மத்திய அரசுக்கும் அங்கத்துவ அரசுகளுக்கும் இடையே பிரிக்கப்பட்டுப் பிரயோகிக்கப்படுவது சமஷ்டி ஆட்சிமுறை. இது கனடா, இந்தியா, சுவிற்ஸலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகின்றது.
சமஷ்டியின் குணாம்சங்கள்
ஒரு சமஷ்டி அமைப்பில் எப்போதும் வரலாறு, இடம், இனம், மதம், மொழி, கலாச்சாரம் போன்ற ஒன்றிணைக்கும் அம்சங்களில் ஒன்றினாலோ அல்லது பலவற்றினாலோ மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்ட சிறு நாடுகளின் பொது அமைப்பு ஒன்று இருக்கும். கனடா, இந்தியா போன்ற நாடுகளில் இந்தப் பொது அமைப்பை சமஷ்டி அல்லது மத்திய அல்லது தேசிய அரசாங்கம் என்றும், சுவிற்ஸலாந்தில் இதனை அரசாங்கம் என்றும், அவுஸ்திரேலியாவில் இதனை பொதுநலவாயம் என்றும் அழைப்பர். இப்பொது அமைப்பின் கீழுள்ள சிறிய அங்கத்துவ நாடுகளை கனடாவில் மாகாணங்கள் / நிலப்பரப்புக்கள் என்றும், இந்தியாவிலும் அவுஸ்திரேலியாவிலும் மாநிலங்கள் என்றும், சுவிற்ஸலாந்தில் கன்ரோன்கள் என்றும் கூறுவர். சிறிய அங்கத்துவ நாடுகளை, பொது அமைப்பான சமஷ்டி அரசு ஒரு மேலான, பாரிய, மையப்படுத்தப்படாத, தேசிய அமைப்பினுள் ஒன்றுபடுத்தி வைத்திருக்கும். அதே வேளை, ஒவ்வொரு அங்கத்துவ நாடும் தனது சுயாதீனம், சுய அடையாளம் என்பவற்றைப் பேணிப் பாதுகாத்துக் கொள்வதற்கும் அது அனுமதிக்கின்றது. அங்கத்துவ நாட்டவர்களிடத்தே தேசிய ஒற்றுமைக்கான விருப்புடன், தத்தமது நாடுகளது சுதந்திரத்தைப் பேணுவதற்கான மன உறுதியும் திடசங்கற்பமும் பிரதான அம்சங்களாகக் காணப்படும்.
சமஷ்டி முறையில் அதிகாரம் சமஷ்டி அரசுக்கும் அங்கத்துவ அரசுகளுக்கும் இடையே பகிர்ந்து அளிக்கப்படுகின்றது. வருமானங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் மக்களுக்குச் சேவைகளை வழங்குவதற்கும் என மத்திய அரசும் அங்கத்துவ அரசுகளும் வெவ்வேறு அதிகாரங்களைத் தத்தமக்கென்று வகுத்து வைத்துக்கொள்கின்றன. நாட்டின் பொது விவகாரங்களில் ஒவ்வொரு அங்கத்துவ அரசும் தனது அதிகாரத்தின் ஒரு பகுதியை மத்திய அரசுக்குப் பிரித்துக் கொடுக்கச் சம்மதிக்கின்றது. கனடாவில் குடிவரவு, தேசிய பாதுகாப்பு போன்ற பொறுப்புக்கள் மத்திய அரசிடமும், கல்வி, சுகாதாரம் போன்றவை மாகாண அரசுகளிடமும் கையளிக்கப்பட்டுள்ளமையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இவ்வாறாக அதிகார மையப்படுத்தாமை சமஷ்டி ஆட்சி முறையின் ஒரு முக்கிய பண்பாகும். மேலும் மத்திய அரசே அண்மைக்காலம் வரை பல நாடுகளில் அதிகாரம் மிக்கதாக இருந்து வந்துள்ளது. ஆனால் இது ஒரு காலம் கடந்த நடைமுறையாக இந்நாட்களில் கருதப்படுகின்றது. பதிலாக அங்கத்துவ அரசுகள் கூடுதலான அதிகாரம் பெற்றுவரும் தன்மை தற்போது இடம்பெற ஆரம்பித்துள்ளது.
சமஷ்டி ஆட்சி முறையில் அங்கத்துவ நாடுகளுக்கிடையில் அரச அதிகாரம் பரவலாக்கப்பட்டிருப்பதனால் அவை தம்மைத் தாமே நிர்வகிக்கக்கூடியனவாக அமையப் பெறுகின்றன. இவ்வாறு அதிகாரத்தைப் பரவலாக்கிப் பகிர்ந்தளிப்பதற்கென்று அங்கு அரசியல் அமைப்புச் சட்டம் ஒன்று எப்போதும் இருக்கும். எழுதப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தில் அதிகாரப் பரவலாக்கம் வலியுறுத்தப்பட்டிருக்கும். சமஷ்டி ஆட்சிமுறையில் இந்த அரசியல் அமைப்புச் சட்டமே அதியுச்ச அதிகாரத்தைக் கொண்டது. இதன் வழியாகவே அங்கத்துவ அரசுகள் நிறுவப்பட்டு, அவற்றின் அதிகார வரம்புகள் வரையறுக்கப்படுகின்றன. சமஷ்டி அரசியல் அமைப்புச் சட்டம் இறுக்கமானதாகவும், நெகிழ் தன்மை அற்றதாகவும், மக்கள் அங்கீகாரம் இன்றி இலகுவில் மாற்றியமைக்கப்பட முடியாததாகவும் காணப்படும்.
ஒரு நாட்டில் உள்ள வெவ்வேறு அரசியல் பிரச்சினைகளுக்கு வௌ;வேறு நிறுவனங்கள் ஊடாகத் தீர்வு காணப்படவேண்டும் என்ற கொள்கையை சமஷ்டி அரசியல் முறை ஏற்றுக்கொள்கின்றது. சில விடயங்கள் சிறிய உள்ளுர்ப் பிரதேசம் ஒன்றை மட்டும் பாதிப்பதாக இருக்கலாம். வேறுசில, நாடளாவிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியனவாக இருக்கலாம். குறிப்பிட்ட ஒரு அங்கத்துவ நாட்டுக்குரிய விவகாரம் அதன் அரச நிறுவனத்தினாலேயே தீர்த்து வைக்கப்படுகின்றது. முழு நாட்டுக்கும் பொதுவான விடயம் மத்திய அரசாங்கத்தினால் தீர்த்து வைக்கப்படுகின்றது. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை தவிர்ந்த ஏனைய விவகாரங்கள் பெரும்பாலும் கீழ் மட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களாலேயே தீர்த்து வைக்கப்படவேண்டும் என்ற ‘குறைந்த பட்சக் கொள்கை’ சமஷ்டி ஆட்சி முறையினால் பின்பற்றப்படுகின்றது. உதாரணமாக அவுஸ்திரேலியாவில் பூர்வீகக் குடியினர் தொடர்பான பிரச்சினைகள் பிரதானமாக தெற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தில் மட்டுமே பெருமளவில் கூர்மையடைந்திருந்தது. இதனால் அப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் பொருட்டு அம்மாநில அரசு, பூர்வீகக் குடியினருக்கான நிலவுரிமை மற்றும் சமூக நல சீர்திருத்தங்கள் பலவற்றை அறிமுகம் செய்தது. அதில் அந்த நாட்டின் பொதுநலவாய அரசு தலையிட வேண்டிய தேவை ஏற்படவில்லை
தொகுப்பு

Comments
Post a Comment