அம்மாவின்.... அன்பு....
இந்த உலகை படைத்த இறைவன் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்க முடியாது என்பதால், ஒவ்வொரு மனித உயிருக்கும் தனது உருவாக தாயைக் கொடுத்தார். அன்னையும், ஆண்டவனும் தனித்தனி வடிவங்கள் இல்லை என்பதை உலகிற்கு இந்த தத்துவம் மூலம் இறைவன் உணர்த்தியிருக்கிறான். இறைவனின் படைப்பில் தன்னலம் கருதாத படைப்பு ஒன்று உண்டு என்றால் அது அன்னை மட்டுமே என்றால் அது மிகையாகாது. அம்மா என்ற சொல்லை தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழியிலும் சிறப்பாக எடுத்து இயம்ப முடியாது என்பது உலகறிந்த தமிழ்அறிஞர்கள் கருத்தாகும்.
அம்மா எனும் வார்த்தையின் ‘அ’ முதல் எழுத்து உயிர் எழுத்து. கருவில் உயிருக்கு உயிர் கொடுக்கிறாள் என்பதை விளக்குகிறது. கருவில் உருவான உயிர் உருவாக்கம் பெருவதற்கு, தாய் உடல்(மெய்) கொடுக்கிறாள் என்பதை குறிக்கவே ‘ம்’ எனும் மெய் எழுத்து அமைந்தது. தான் உருவாக்கிய குழந்தையை பத்து மாதங்கள் சுமந்து, பெற்று, உலகின் வெளிச்சத்தை காண வழிகாட்டுகிறாள் என்பதையே கடைசி எழுத்தான உயிர்மெய் எழுத்தான ‘மா’, குறிக்கிறது. இந்த தத்துவத்தை உலகிற்கு உணர்த்தவே உயிர், மெய், உயிர்மெய் என மூன்று எழுத்துக்கள் சேர்ந்து அம்மா என்ற சொல் உருவாக்கம் பெற்றது.
“ மற்ற நாடுகளை போல் அல்லாமல் இந்தியாவில் மட்டும் பெண் என்பவள் தாயாக பார்க்கப்படுகிறாள். பெண் என்பவள் தாயாக தரிசனம் தரும் தெய்வம். அவள் தனது முழு வாழ்க்கையையும், தாய்மைக்கே அர்பணிக்கிறாள்” இது சிகாகோ மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் இந்திய பெண்ணின் நிலைபற்றி பெருமையாகப் பேசியது.
இது போல், அன்னையின் பெருமை குறித்து அறியாதவர்கள், பேசாதவர்கள் இந்த உலகில் யாருமே இருக்க முடியாது. வணங்க வேண்டிய அன்பின் வடிவமான அன்னையை வருத்தப்பட வைக்கக்கூடாது என்று இந்த நாளிலாவது உறுதி ஏற்போம்



Comments
Post a Comment